Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

மழை நாட்கள் வரும்

எம். ஏ. நுஃமான்

------------------------------------------------------

மழை நாட்கள் வரும்

எம். ஏ. நுஃமான்

அன்னம்

சிவகங்கை

--------------------------------------------------------

அன்னம் 32

மழை நாட்கள் வரும்

(c) எம். ஏ. நுஃமான் / முதற்பதிப்பு மே 1983 / வெளியீடு அன்னம் (பி) லிட். சிவகங்கை / அச்சும் அமைப்பும் அகரம் சிவகங்கை 623 560 / முகப்போவியம் பி. ஞானவேலு / விலை ரூ. 500.

--------------------------------------------------------

சில குறிப்புகள்

கடந்த சில ஆண்டுகளில் தமிழிலே வெளிவந்த சில கவிதைத் தொகுதிகளுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளைப் படித்துப் பார்த்திருக்கிறேன். அத்தொகுப்புக்கள் சுமக்க முடியாத பிரகடனங்களாகவே அவை அமைந்துளன. என்னுடைய இத்தொகுப்புக்கும் அத்தகைய ஒரு முன்னுரை எழுதுவது எனது நோக்கமல்ல. 'ஆனானப்பட்ட' கம்பனே பாற்கடலைக் குடித்து முடிக்க முற்பட்ட ஒரு பூனையாகத்தான் தன்னைக் கருதிக் கொண்டான். நான் எம்மாத்திரம்?

1960ஆம் ஆண்டுமுதல் நான் கவிதை எழுதி வருகின்றேன்; அடிக்கடி அல்ல, இடைக்கிடை. கடந்த இருபது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் நான் எழுதிக் குவித்து விடவில்லை. எனது ஆரம்ப காலக் கவிதைகள் பலவற்றை இப்போது படித்துப் பார்க்கும் போது அவை சிறுபிள்ளை விளையாட்டாகவே தோன்றுகின்றன. எனது பிற்காலக் கவிதைகள் எல்லாம் மகத்தானவை என்பது இதன் பொருளல்ல. இன்றைக்கு நான் எழுதுவது இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம். பலருக்கு இந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் மேதைகளின் (genius) கதை வேறு. என்னை ஒரு மேதை என்று நம்பி, என்னை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

ஒவ்வொரு மனிதனும் அவன் வாழும் காலம் வரை வளர்ந்து கொண்டே போகிறான்; அல்லது மாற்றமடைகிறான். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களில் என்னுள்ளும், எனக்கு வெளியிலும் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள் எனது கவிதையிலும் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் நான் வெறுமையாக இருந்தேன். இளமையில் எழுதத் தொடங்கும் எல்லோரையும் போல எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னுள் இருந்தது. மனப்போக்குக்கு ஏற்ப அப்போதைக்கப்போது எதை எதைப் பற்றியோ எழுதினேன். இடைக் காலத்தில் சமயச் சார்பான ஆன்மீகச் சிந்தனைகள் என்னைக் கவர்ந்தன. சமயத் தத்துவங்களைச் சரியாகக் கடைப் பிடிப்பதன் மூலமே வாழ்வின் தீமைகளைக் களைய முடியும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. பாரசீக சூபிக் கவிஞர் றுமியின் 'மஸ்னவி'யால் நான் ஈர்க்கப் பட்டேன். இக்பாலின் சித்தாதமும் என்னைக் கவர்ந்தது. 1965-67 ம் ஆண்டுகளில் நான் எழுதிய கவிதைகள் பலவற்றில் இதன் பாதிப்பைக் காணலாம். 67 ன் பின் ஆன்மீகச் சிந்தனைப் போக்கில் இருந்து நான் மெல்ல மெல்ல விடுபடத் தொடங்கினேன். மார்க்சீயத் தத்துவார்த்த நூல்கள் என்னைப் பெரிதும் வளப்படுத்தின. வாழ்க்கைப் போக்குகளை நிர்ணயிக்கும் புறநிலை விதிகளை அவை எனக்குக் கற்பித்தன. வாழ்க்கையின் இயக்கப் போக்கைப் புரிந்து கொள்ள உதவின. இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்த்தின. இவ்வகையில் எனது பெரும்பாலான பிற்காலக் கவிதைகள் சமூக அரசியல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

உருவத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இறுக்கமான ஓசைக் கட்டமைப்பை நான் பேணி வந்திருக்கிறேன். தமிழில் உள்ள மரபு வழிப்பட்ட பெரும்பாலான செய்யுள் வடிவங்களை நான் கையாண்டிருக்கிறேன். எனது பிற்காலக் கவிதைகளில் இந்த ஓசைக் கட்டுத் தளர்ந்து பேச்சோசைப் பண்பு அதிகரித்துள்ளது. கலிவெண்பா, அகவல் போன்ற செய்யுள் வடிவங்களையே நான் இப்போது கவிதை எழுத அதிகம் பயன்படுத்துகின்றேன். பொருள் அமைப்புக்கேற்ப அடி பிரித்து எழுதுவதால் இவற்றின் ஓசைக்கட்டுப் பெரிதும் தளர்த்தப்படுகின்றது. சீர், தளையை மட்டும் பேணி எதுகை, மோனைக்குரிய முக்கியத்துவத்தைக் குறைத்து விடுவதால் செய்யுளையும், உரை நடையை ஒத்து, ஆனால் ஒத்திசை கூடிய ஊடகமாக மாற்ற முடிகின்றது. எனது கவிதைப் பொருளும் உத்தி முறையும் இவற்றை நிர்ணயிக்கின்றன என்று தோன்றுகின்றது.

இலக்கியம் முழுமொத்தமான மனித அனுபவத்தின் வெளிப்பாடு என்றே நான் இன்று கருதுகின்றேன். சமூக அரசியல் பிரச்சனைக்கு முதன்மை கொடுத்து அரசியல் சார்பற்ற தனி உணர்வுகளை இலக்கியத்தில் நிராகரிப்பதோ, அல்லது தனி உணர்வுகளுக்கே முதன்மை கொடுத்து சமூக, அரசியல் உணர்வுகளை வெளி ஒதுக்குவதோ இலக்கியத்துக்குப் புறம்பானது என்பது என் கருத்து. வாழ்க்கை பன்முகப் பட்டது, மனித அனுபவங்கள் பன்முகப்பட்டவை. இலக்கியம் இவை எல்லாவற்றையும் பிரதிபலிக்கின்றது; பிரதிபலிக்க வேண்டும். ஆயினும் சமூக, அரசியல் நடவடிக்கைகள் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியாக இருப்பதால், சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு படைப்பாளி அதில் அக்கறை காட்டுவது தவிர்க்க முடியாதது.

அந்த வகையில் 1967 ஆவணி தொடக்கம் 1981 ஆவணி வரையுள்ள பதினான்கு ஆண்டுகளில் அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளுள் சமூக, அரசியல் சார்பான சில கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. ஏற்கனவே இத்தகைய எனது ஐந்து நெடுங்கவிதைகளின் தொகுப்பாக 'தாத்தாமாரும் பேரர்களும்' (1977) வெளிவந்துள்ளது. அரசியலுக்குப் புறம்பான, தன் உணர்வு சார்ந்த கவிதைகளின் தொகுப்பொன்றும் 'அழியா நிழல்கள்' என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இப்போது வெளிவரும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பற்றி நான் விசேடமாக எதையும் சொல்லப் போவதில்லை. வாசகர்கள் சொல்லட்டும். இது அவர்களுக்கே உரியது.

இலக்கிய பீடத்தில் இடம்பெறுவதற்காக நான் எழுதவில்லை. எனது சிந்தனைகளையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ளவே எழுதுகிறேன். என்னில் தங்களையும் இனங் காண்பவர்களுக்கு எனது கவிதைகள் பிடித்துப் போகலாம். அல்லாதோருக்கு இவை வெறுப்பைத் தரலாம். எல்லோரையும் என்னால் திருப்திப்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. இந்நூல் வெளிவருவதில் அதிக ஆர்வம் காட்டிய நண்பர் இ. பத்மநாப ஐயர் அவர்களுக்கும் இதை வெளியிடும் அன்னம் நிறுவனத்தினருக்கும் எனது நன்றிகள்.

எம். ஏ. நுஃமான்

30-8-1982

"நூறி மன்ஸில்",

கல்முனை -

இலங்கை.

----------------------------------------------------------

பொருளடக்கம்

மழை நாட்கள் வரும் 9

நாங்கள் கோபமுற்றெழும் போது... 16

சுவர்க்கமும் நரகமும் 22

புகை வண்டிக்காகக் காத்திருக்கையில் 29

அரைக்கண நேர மின்னல் எனினும் 32

ஹோசி மின் நினைவாக 34

இலைக்கறிக்காறி 37

துயில் கலைந்தோர் 40

முறையீடு 47

மே முதல் திகதி 53

கண் விழித்திருங்கள் 56

எங்கள் கிராமத்து மண்ணும் விய்ட்நாமின் குருதியும் 59

அவர்களும் பூனைகளும் நாய்களும் 63

இறுதி அஞ்சலி 65

நேற்றைய மாலையும் இன்றைய காலையும் 69

ஒரு மஹாகவி பற்றி மற்றொரு கவிஞன் 72

புத்தரின் படுகொலை 79

----------------------------------------------------

மழை நாட்கள் வரும்

அது ஒரு கொடு வெயில் நாள்

ஆறுகள் வற்றினவே!

கொதிதணல் எனும் வெயிலின்

கொடுமைகள் முற்றினவே!

விதிஇது என அவர்கள்

வீழ்ந்து கிடந்திலரே!

எதுவரை எனினும் அவர்

எழுந்து நடந்தனரே.

சென்று சென்றொரு செம்புலம் எய்தினார்

ஒன்றி ஒன்றி உயிர், உடல் ஊக்கினார்

வென்றி வென்றி, என அவர் வேண்டினார்

நின்று வேலை நிகழ்த்தத் தொடங்கினார்.

வெயில் எறித்துப் பொசுக்கிய போதிலும்

வீழ்ந்து சோம்பிக் கிடத்தல் தவிர்த்தவர்

பயிர் விளைத்துப் படைத்தல் தொடங்கினார்

பாரிலே புது மேன்ம இயற்றினார்.

வெயிலின் வெய்ய கதிர்களினால்

வெப்பமான பூமியிலே

அயர்வை நீக்கி உழைத்தார்கள்

அல்லும் பகலும் உழைத்தார்கள்

வியர்வை நீரை அப்பயிரின்

வேரின் மீது பெய்தார்கள்

அயர்வை நீக்கி உழைத்தார்கள்

அல்லும் பகலும் உழைத்தார்கள்

உப்பு நீரே ஆனாலும்

உழைப்பு நீரே ஆகையால்

வெப்ப மான பூமியிலே

மெல்லப் பயிர்கள் தோன்றினவே.

தோற்றிய பயிர்களுக்கும்

துன்பத்தைச் செய்தான் வெய்யோன்

காற்றிலும் அனலைச் சேர்த்துக்

கருக்கினான்; கடவுள் மீது

போற்றுதல் பாடினார்கள்

புதுப் பயிர் செய்தார்; நல்ல

மாற்றத்தை வேண்டி அன்னார்

மறுதரம் உழைக்க லானார்.

வேரின் மீது மென்மேலும்

வியர்வை நீரைப் பெய்தார்கள்

சோர்தல் இன்றி அன்னோர்கள்

தொடர்ந்து பாடு பட்டார்கள்

காரின் வருகை எதிர் நோக்கிக்

கடினமாக உழைத்தார்கள்

வேரின் மீது மென்மேலும்

வியர்வை நீரைப் பெய்தார்கள்

இன்றும் இனியும் எப்போதும்

எரிக்கும் வெயிலே எறித்தாலும்

என்றோ ஒருநாள் மழை பெய்யும்

என்றே அவர்கள் உழைத்தார்கள்.

வாழ்க்கை வற்றிப் போம்வரையும்

வழியில் நாங்கள் செல்வோமே

வீழ்ந்து போகும் முன், ஓர்நாள்

விடியும் என்றே உழைத்தார்கள்

விடிவை நோக்கி உழைப்போரின்

வியர்வை படு மண் கசிந்து

மடியும் வரையும் பாடுபடும்

மனிதர் உழைப்பை வாழ்த்தியது.

வாழ்த்திய வாழ்த்தில் வானம் கனிந்தது

வண்மை யான உழைப்பிற் சிலிர்த்தது

வீழ்த்தி வெப்பம் பொசுக்கிய அவ்வெயில்

வெட்கி வானத்தின் உட்புறம் சென்றது.

வியர்வை பெய்து பயிர்விளை விக்கும்அவ்

வெற்றியாளரின் மேனியைப் போலவே

உயரமாக மிதந்த அம் மேகங்கள்

ஒவ்வொன்றாகக் கனிந்து கறுத்தன.

இது ஒரு புது மழைநாள்

இருள்கிறதே பெருவான்!

அதோ ஒரு பெரும் இடியும்

அதிர்கிறதே; பலநாள்

கொதி தணல் எனும் வெயிலின்

கொடுமையின் நலி வகல

இது ஒரு புது மழை நாள்

இருள்கிறதே பெருவான்

காற்றுப் பெரிதாய் அசைகிறது

கறுத்த முகிலோ கவிகிறது

நேற்றும் முன்பும் அதன் முன்பும்

நீண்ட நாட்களாய், வெய்யில்

சீற்றத் தோடே எரித்ததுவே

தீய்த்துத் தீய்த்துக் கருக்கியதே

ஆற்றுவோம் நாம் நும் துயரை

ஆற்றுவோம் நாம் என்பது போல்

காற்றுப் பெரிதாய் அசைகிறதே

கறுத்த முகிலோ கவிகிறதே.

மின்னல் ஒன்று மின்னி மறைந்தது

வினாடியின் அரைவாசியுள்; நம்பிக்கைச்

சின்னம் ஒன்று தெரிந்து மகிழ்ச்சியைச்

செய்தல் போல் அதன் தேசு பொலிந்தது.

இன்னும் இன்னும் இருள் கவிகின்றதே!

இறுக்கமான முகில் கவிகின்றதே!

மின்னல் ஒன்று மிளிர்ந்து மறைந்தது

மீண்டும்; மீண்டுமோர் மின்னல் ஒளிர்ந்தது.

கறுத்த மேகம் கருக்கொண்ட

கனத்த முத்துத் துளியெல்லாம்

இறுக்க முற்றுக் கிடக்கின்ற

இந்த மண்ணில் வீழ்கிறது.

முறுகிக் காற்றுச் சுழல்கிறது

மூசி மூசிச் சுழல்கிறது

இறுகிப் போன தரை மீது

நீரை அள்ளி இறைக்கிறது.

சடசட எனமழை பொழிகிறது

தரையின் மேனி நனைகிறது

சட டசஎன மழை பொழிகிறது

தரையின் மேனி குளிர்கிறது

திடு திடு எனும் இடி ஒலியுடனே

சில் எனும் கூதற் சுவையுடனே

சடசட என மழை பொழிகிறது

தரையின் நெஞ்சம் குளிர்கிறது.

புழுதி மூடிக் கிடந்த அவ் வானமும்

புழுதி மூடிக் கிடந்த இப் பூமியும்

புழுதி மூடிக் கிடந்த மரஞ்செடி

புழுதி மூடிக் கிடந்த புற்பூண்டுகள்

கழுவிக் கொண்டு பெருமழை பெய்தது

காற்றினூடு கலந்திரை கின்றது

புழுதி மூடிக் கிடந்த மனங்களைப்

புதுக்கல் போல மழை பொழிகின்றது.

நேற்றும் முன்பும் அதன் முன்பும்

நீண்ட நாட்களாய், வெய்யில்

சீற்றத் தோடே எரிக்கையிலே

தீய்ந்து போன வயலெங்கும்

ஊற்றிக் கொண்டு செல்கிறது.

ஓயலின்றிப் பெய்கிறது.

நேற்றும் முன்பும் அதன் முன்பும்

நிகழ்ந்த துன்பம் அகல்கிறது.

நாளை மீண்டும் வெயில் வீழும்

நனைந்த பூமி தழலாகும்

வாழ்க்கை வற்றிப் போம் வரையும்

வழியில் அன்னோர் செல்வார்கள்

வீழ்ந்து போகும் முன் ஓர் நாள்

விடியும் என்றே செல்வார்கள்

நாளை மறுநாள் மழை பெய்யும்

நாளுக்காக உழைப்பார்கள்.

16-8-1967

----------------------------------------------------

நாங்கள் கோபமுற்றெழும் போது...

எங்கள் அடுப்பில் எரியா நெருப்பு

எங்கள் வயிற்றில்

எரிந்து கொண்டுள்ளதை

நீயறியாயா?

நிதமும் நிதமும்

எங்கள் வயிற்றில் எரியும் நெருப்புத்

தணலில்

நங்கள் சாம்பராவதை

நீயறியாயா?

நீர்ப்பாத்திரத்தை

ஏந்திய இவர்கள், எம்மைக் கடந்து

பாராததுபோல் தூரச் செல்வதை

நீ காண்கிலையா?

நிதமும்

அவர்கள்

நீர்ப்பாத்திரத்துள் நீர் நிறைவதையும்

எங்கள் வயிற்றில் எரியும் நெருப்போ

கொழுந்துவிட் டெரிந்து

கொண்டிருப் பதையும்

அழும்போ தெமது கண்ணீர்த் துளிகள்

பழுக்கக் காய்ச்சிய

விழிகளில் இருந்து

வெந்நீர்த் துளிகளாய்

வீழுகின் றதையும்

நிதமும் நிதமும் நீ அறியாயா?

ஆயினும் ஏன் நீ

அமைதிகொண் டுள்ளாய்?

வசந்தகாலப் பசும் நினைவுகளை

வைகறைப் பொழுதில் மலரும் உணர்வினை

மாலைப் பொழுதின் கோலச் செறிவை

மெல்லிராப் பொழுதின் வேட்கையை

எல்லாம்

ஏந்திவரும் உன் இன்னறும் தென்றல்

எங்கள் நெருப்பை

அணைப்பதே இல்லை!

வானில் பூத்த மீன்மலர் தானும்

தண்ணொளி தெளிக்கும் வெண்ணிலா தானும்

மிதந்து செல்லும் வெண்முகில் தானும்

எங்கள் நெருப்பை

அணைப்பதே இல்லை!

எரியும் நெருப்புள்

இருந்து கொண்டே

இசைக்காய்த் தலையை

அசைத்தல் கூடுமா...?

எங்கள் சொந்தம் இல்லாப் பூமியில்

எங்கள் சொந்தம் இல்லா ஆலையில்

எங்கள் வேர்வை பொங்கி வழிகையில்

பொங்கிய எங்கள்

வேர்வை நீரும்

எங்கள் நெருப்பை

அணைப்பதே இல்லை!

எங்கள் வயிற்றில்

எரியும் நெருப்போ

நெய்யுண்டது போல்

நீண்டெரி கின்றது

ஆயினும்

ஏன்நீ அமைதியோ டுள்ளாய்?

நெருப்பை அணைக்கும் நீர்ப் பாத்திரத்தை

ஏந்திய இவர்கள்

எம்மைக் கடந்து

பாராதது போல் தூரச் செல்கையில்

நாய்கள் போல நாக்குத் தொங்க

நாம் அவர் பின்னால்

நடந்து செல்வதா?

எங்கள் வயிற்றில் நெருப்பே எரிகையில்

அங்கே அவர்கள்

அமைதியாகக்

காலைப் பானம் பருகிக் களிப்பதா?

இந்த உலகின் இந்த வளங்களைச்

சந்தோ ஷிக்கும் சொந்தக் காரர்

அவர்கள் மட்டுமா?

'ஆம்' எனில், நாங்கள்

திருப்தி கொள்ளோம்.

தீயின் நாக்குகள்

எரிக்கும் வரை நாம்

திருப்தியே கொள்ளோம்!

எங்கள் நீசச் செயல்களுக் கெல்லாம்

எங்கள் வாழ்க்கைக் குறைகளுக் கெல்லாம்

எங்கள் வயிற்றில்

எரியும் நெருப்புத்

தணியும் போதுதான் விடிவுண் டாகும்!

ஆகையால்

நாங்கள் அமைதி கொள்ளோம்

எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்

எங்கள் பொறுமை

எரிந்து போய் விட்டது!

நெருப்பை அணைக்கும்

நீர்ப்பாத் திரத்தை

ஏந்திய இவர்கள், எம்மைக் கடந்து

பாராதது போல் தூரச் செல்கையில்

எங்கள் பொறுமை

எரிந்தே விட்டது!

ஆகையால்

எங்கள் கோபப் பார்வையால்

உன் வதனத்தில்

புன்னகை மலர்க!

எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பு

கண்களின் ஊடே கனன்று வருக!

எங்கள் பார்வையில் எதிர்ப்படும் போதில்

அவர்கள் பொசுங்கி அழிந்தே விடுக!

நெருப்பை அணைக்கும்

நீர்ப்பா த்திரங்கள்

எங்கள் வயிற்றில் பொங்கும் தீயை

அணைத்தே விடுக!

அந்த நாளில்

'கலகக் காரர் யாம்'

எனும் கடிய

குற்றச் சாட்டைக் கூறவே மாட்டாய்

மற்றுயிர் எல்லாம் மலர்வதற் காக

இரத்தப் பசளையே

இட நேரிடின்

நீ கூடா தென்றதைக் கூறவே மாட்டாய்!

உன் வதனத்தில்

புன்னகை மலரும்

நாளும் அந்த

நாளே யாகும்!

5-4-1968

----------------------------------------------------

சுவர்க்கமும் நரகமும்

பள்ளிவாயிலின் உள்ளறை எங்கும்

விரித்த பாய்களின் மீதெல்லாம்

நெற்றி உராய்ந்த தழும்புகள்

நிறைந்திருக் கின்றன.

ஆயினும் இறைவா,

அவர்களுக் கெல்லாம்

உனது சுவர்க்கக் கதவுகள் திறந்து

தூய வாழ்த்துச் சோபனம் கூறக்

காத்திருப்பாய் எனக்

கனவிலும் நம்பேன்.

நினது சொர்க்கத் தருக்களின் நிழலில்

சாய்ந்த வாறு சயனித்தற்கும்

நினது சொர்க்க நிலவொளி சுமந்து

நுழையும் தென்றலை நுகர்தற் காகவும்

நினது சொர்க்கக் கன்னியர் நெஞ்சில்

துயிலும் இன்பம் துய்ப்பதற் காகவும்

இந்த மனிதர்

ஏங்காவிடினும்

பயம் தரும் உனது நரகப் படுக்கையின்

நெருப்பு மெத்தை நினைத்தற் கஞ்சியே

உனது பள்ளியின் உள்ளே வந்தனர்.

மக்களுட் புனித மனிதர் தாம் எனச்

செப்புதற் காகவே தினமும் வந்தனர்.

அதிகாரத்தைத் தங்கள் கைகளில்

ஆட்சிப் படுத்தவும் அவர்கள் வந்தனர்.

ஓ, எனதிறைவா,

உனது பள்ளியின் பாய்கள்,

இவர்கள் பாதம் பட்டுத்

தேய்ந்து போயின.

தினமும் இவர்கள்

உன் அடியார் என உறுதிப் படுத்த

மொழி புரியாது முணுமுணுக்கின்றார்

வாழ்க்கையை விட்டும்

நின் மார்க்கத்தைப்

பள்ளி வாயிலின்

உள்ளடைத் துள்ளார்.

பாறையை நீருட்

பதித்தெடுத் தாலும்

உட்புறம் ஈரம்

ஊறுவதில்லை.

ஆயினும் இறைவா,

அவர்களே உனது

அடியார் என்பதாய் அறிவித்தார்கள்.

எனினும், அவர்கள் இதயமோ

நீண்ட

பாலைவனம்போல்

காய்ந்திருக்கின்றது.

அவர்கள் மூச்சுப் பட்டதும்

அன்றே

மலர்ந்த பூக்களும் வாடி விட்டன.

அவர்கள் பாதம் அண்மியவுடனே

பசும்புல் நுனியும் பொசுங்கி விட்டது.

அவர்கள் கரங்கள் அணைத்த போதில்

ஏழையின் தேகம் எரிந்து விட்டது.

ஆயினும் இறைவா

அவர்களே உனது

அடியார் என்பதாய் அறிவித்தார்கள்.

ஒவ்வோர் அணுவின்

உயிர் மூச்சினையும்

அறிந்து கொண்டிருக்கும் ஆண்டவா!

அங்கே,

உனது சொர்க்கக் கதவுகள் ஊடே

இவர் நுழைவுற்றால்...

ஈரமுள்ளோர்க்காய்

இணக்கிய உனது

சுவர்க்க எழிலே

அழிவுறும் என்பதை

நீ அறிவாயா?

என் இதயத்தின்

ஈரக்கசிவை

என்றும் போல இன்றும் நீ அறிவாய்!

இதய ஈரம் இரத்தத் தோடு

ஒவ்வோர் அணுவிலும் ஓடிக் கலந்தது.

ஆகையால்

எனது அங்கம் தோறும்

ஈரம் உள்ளதை

இறைவ நீ அறிவாய்.

எனது பார்வையில் ஈரம் உள்ளதால்

பார்த்த பொருளெலாம் ஈரம் படிந்தது.

எனது விரல்களில் ஈரம் உள்ளதால்

தொட்ட பொருளெலாம்

துளிர்த்து விட்டன.

எனது பாதத்தில் ஈரம் உள்ளதால்

நசுங்கிய புற்களும் நன்கு தளிர்த்தன.

எனது சுவாசம் தடவிய போதில்

அரும்புகள் எல்லாம்

அலர்ந்து விட்டன.

ஆயினும் இறைவா,

நீ எனக்காகச்

சொந்த மாக்க எந்தக் கதவைத்

திறந்துவைத் துளாய் எனச்

சிறிதும் அறியேன்.

உனது சொர்க்கம் ஆயினும் ஒன்றே

உனது நரகம் ஆயினும் ஒன்றே

எந்தக் கதவைச் சொந்த மாக்கினும்

நான் அதன் உள்ளே

போய் நுழைதற்குச்

சித்தமாய் உள்ளேன்.

ஏனெனில் இறைவா,

நித்தமும் மனித நேய உணர்வினால்

என்னுள் ஈரம் கசிகையில்

அந்த ஈரம்

எங்கு படிந்ததோ

அங்கங் கெல்லாம்

எனது சுவர்க்கம் மலர்ந்ததைக் க்ண்டேன்

நான் அதன் உள்ளே

போய் மகிழ்வுற்றேன்.

வாழ்க்கையைச் சுவர்க்க

மாளிகை ஆக்கினேன்.

ஆகையால்

இந்த உலகுக் கப்பால்

நீ அமைத்துள்ள

சுவர்க்கக் கதவுகள்

நான் நுழையாது மூடிக் கொள்ளினும்

இறைவா,

அதற்காய்க் குறைபட மாட்டேன்.

ஈரமில்லாமல் இரவும் பகலும்

உனது பள்ளியின் உள்ளே வந்து

பாய்களில் நெற்றியை

தேய்த்துச் செல்லும்

இவர்களுக் காகவே சுவர்க்கம் என்றால்

ஆண்டவா

அதைநான் வேண்டுதல் செய்யேன்.

அவர்கள் புகுந்த

சுவர்க்கம் விடவும்

நரகே ஆன்க்கு

நன்றெனக் கொள்வேன்.

1-4-1963

----------------------------------------------------

புகை வண்டிக்காகக்

காத்திருக்கையில்...

வண்டி இன்னும் வரவே இல்லை

கைகளில் சுமையுடன்

காத்திருக் கின்றேன்

வண்டி இன்னும் வரவே இல்லை.

கோட்டைப் புகைவண்டி நிலையம்

கூட்டமோ எங்கணும் அலையும்.

பெட்டிகள்

படுக்கைகள்

பிறபொருட் சுமைகள்

அங்கும் இங்கும்

ஆட்களோ அதிகம்.

வாயில் இருந்து புகைவிடும் வண்டிகள்

வாயில் இருந்து புகைவிடும் மனிதர்கள்

சப்பாத்து ஓசை

தட்... தட்... என்னும்

எப்புறம் திரும்பினும்

இரைச்சலே கேட்கும்

கதைப்பும் சிரிப்பும் காதிலே மோதும்...

சாமான் வண்டியின்

தடதடச் சத்தம்

இடைக்கிடை பெரிதாய்

என்னைக் கடக்கும்.

வண்டி இன்னும் வரவே இல்லை.

இத்தனை பேரின் மத்தியில்

தனியே

கைகளில் சுமையுடன் காத்திருக் கின்றேன்

வண்டி இன்னும்

வரவே இல்லை.

எத்தனை மனிதர்

இங்கிருக்கின்றார்!

இருந்தும் என்ன?

இருந்தும் என்ன?

சிறுநீர் கழிக்கச்

செல்லலாம் என்றால்

யாரிடம் எனது

கைச்சுமை கொடுப்பேன்.

உடறட்ட மெனிக்கா...

உத்தர தேவி

ஒவ்வொன்றாக ஓடிச் சென்றது.

எனது வண்டியை இன்னும் காணேன்.

இத்தனை மனிதர் மத்தியில்

தனியே,

கைகளில் சுமையுடன் காத்திருக்கின்றேன்

வண்டி இன்னும்

வரவே இல்லை.

29-5-1968

----------------------------------------------------

அரைக்கண நேரத்து

மின்னல் எனினும்...

வான் இருண்டுளது;

நட்சத்திரங்கள் மறைந்தன.

ஓ,

நான் போகும் பாதை இதுவா?

இருட்டின் நடுவில் ஏதும்

தோன்றவே இல்லை;

எது என் திசை?

நீள் தொலைவில் அதோ

வான் இருண்டுளது;

நட்சத்திரங்கள் மறைந்துளவே.

இன்னும் என்வண்டி வரவில்லை.

ஆயின், இருட்டில் அதோ

மின்மினிப் பூச்சிகள் ஆயிரம்

ஏற்றும் விளக்கொளியில்

என் வழி கண்டு நடத்தல் இயலுமா?

இல்லை; ஒரு

மின்னல் அரைக்கணம் ஏனும்

ஒளிர்ந்தால் மிக உதவும்.

ஆம், இதோ மின்னல் அடித்தது;

தூர அகன்று செலும்

நாம் போகும் பாதைகள்

நன்கு தெரிந்தன;

நான் நடப்பேன்.

போம் வழி நன்கு புலப்படும் போதில்

இருள் கவூம்,

ஆம், ஒரு மின்னல் அடிக்கும்

பிறகும் அது தெரியும்.

இருட்டிலே நாங்கள்

வழிநடக் கின்றோம்.

இதோ எரியும்

குருட்டு விளக்கொளி

மின்மினிப் பூச்சிகள்

வழி துலக்கி.

வரட்டும், என இன்னும் காத்திருப்போமா?

வழி நடப்போம்;

அரைக் கண நேரத்து மின்னல் எனினும்

அது பெரிதே.

30-12-1968

----------------------------------------------------

ஹோசி மின் நினைவாக

I

வேட்டை விமானம் விண்ணில் இரைந்தன

விசப்புகைக் குண்டுகள்

வீழ்ந்து வெடித்தன

எகிறிப் பறந்தன

பீரங்கிக் குண்டுகள்

சடசடத்தன மெஷின் துப்பாக்கிகள்.

ஓலம் அழுகை

கூக்குரல் ஒலிகள்

ஓலம்...

அழுகை...

கூக்குரல் ஒலிகள்...

வயற்புறங் களிலும்

வாசற்படியிலும்

ஓடிய இரத்தம் உறைந்து கிடந்தது.

புகைந்து கொண்டிருந்தன குடிசைகள்.

கரும்புகை

மிக மெதுவாக விண்ணிற் கலந்தது...

II

அடர்ந்த காட்டில் அமைதி துயின்றது

இடைக்கிடை எங்கோ இருண்ட பகுதியில்

காட்டுப் பூச்சிகள் கத்திக் கேட்டது.

மூங்கிற் புதர்கள் மூடிய ஆற்றின்

கரையில் மெதுவாய்க் காற்று வீசியது.

தண்ணீர்ப் பையில் தண்ணீர் நிரப்பிய

வீரன் நிமிர்ந்து மேலே நோக்கினான்...

மூங்கிலில் வண்ணப் பூச்சிகள் மொய்த்தன.

பதுங்கி இருந்த படையினை நோக்கி

முதுகுச் சுமையுடன்

அவன்முன் நடந்தான்...

மரங்களின் கீழே

மடியில் வளர்த்திய

துவக்குடன்

ரொட்டியைச் சுவைத்த வாறு

வீரர் இருதனர்...

மிகமெதுவாக

வானொலிக் கருவி வழங்கிய மெல்லிசை

நின்றது...

சிறிது நீண்டது மௌனம்...

ஹனோய் வானொலி கம்மிய குரலில்

ஒலிபரப்பியது...

'ஹோசிமின் இறந்தார்...'

ரொட்டித் துண்டுகள் மண்ணில் விழுந்தன.

நிசப்தமான மரங்களின் நிழலில்

மௌன அஞ்சலி நீண்டு வளர்ந்தது...

"உன் நரம்புகளில் ஓடிய உணர்வின்

சிறுதுளி எனினும் சேர்க எம் குருதியில்...

இன்னும் இன்னும் இழக்கிலோம் எங்கள்

மண்ணிலே சிறிய மணலையும் நாங்கள்..."

கொமாண்டர் அடங்கிய குரலில் கூறினான்.

காட்டுப் பறவைகள் கத்திப் பறந்தன.

மீண்டும் வேட்கை விமானம் இரைந்தன.

அடர்ந்த காட்டின் மரங்களின் அடியில்

விசப்புகைக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன...

பதுங்கி இருந்த படையினர் கரங்களின்

மெஷின் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கின...

ஓங்கி வளர்ந்த உயரமான

மூங்கிற் புதர்கள் மூடிய இருளில்

மீண்டும் விமானம் வீழ்ந்து நொறுங்கின.

1960

----------------------------------------------------

இலைக்கறிக்காறி

'லெக்கேறி...ரீக்...கீ...கோ!'

என்று தெருவில்

தொலைவில் ஒரு மூடை

சுமந்து நடந்து வரும்

செல்லாளின் கூவல்

தெருவெங்கும் கேட்கிறது.

அல்லயலில்

வேலி அடைப்புக்குப் பின் இருந்து

'கொண்டாகா'

என்றொருத்தி கூப்பிட்டாள்.

போய்க் கடப்பைத்

தள்ளிவிட்டுச் சென்று

தலைச்சுமையைக் கீழ் இறக்கி

வைத்தாள் முருங்கைமரத்தடியில்.

வீதியெல்லாம்

அல்லாடி வந்த

அவளின் தளர்ந்த உடல்

காலை வெயிலில்

கசிந்து நனைந்துளது.

சீலைத் தலைப்பால்

சிறிதே துடைத்து விட்டாள்.

சாக்கில் இருந்த

தளிர்த்த இலைக்கறியில்

தட்டில் எடுத்து வைத்தாள்

பத்துச் சதத்துக்கு.

'நட்டங்கா இன்னமும்

நாலுபடி வை' என்றாள்

'கட்டாகா' என்றாள் கறிக்காரி

'எப்படியும் நீ

இப்பிடித்தான் நல்ல அறும்பு'

என்றிவள் சொன்னாள்.

'உச்சி வெயில்ல

வயல்ல சுழியோடிப்

பிச்சி வந்து விக்கும்

புழைப்பு புள்ள என் புழைப்பு...

நாளும் முழுப்பொழுதும்

நாயா அலஞ்சு

சதிரத்தச் சாறாப் புழிஞ்சா

கெடைக்கிறது

என்னத்துக் காகும்?

இரண்டு குமர் கெடக்கு...'

முந்தானையில் காசை

முடிந்தபடி எழுந்த

செல்லாளைப் பார்த்து,

திரும்பி உட்செல்லுகையில்

'எல்லார்க்கும் கக்கிசந்தான்

என்ன செய்யலாம்' என்றாள்.

'லெக்கேறி...ரீக்...கீ...கோ!'

என்று தெருவில்

தொலைவில் ஒரு மூடை

சுமந்து நடந்து செலும்

செல்லாளின் கூவல்

தெருவெங்கும் கேட்கிறது.

----------------------------------------------------

துயில் கலைந்தோர்

I

அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள்

எந்தச் சிறுநிழலும் இல்லாத பாதையிலே

அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள்.

'எங்களிடம் என்ன

இழக்க இருக்கிறது?

எங்களிடம் என்ன

இழக்க இருக்கிறது?'

'வாருங்கள் நாங்கள் இந்த

வையகத்தை வென்றெடுப்போம்

வாருங்கள் நாங்கள் இந்த

வையகத்தை வென்றெடுப்போம்'

அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள்

எந்தச் சிறுநிழலும் இல்லாத பாதையிலே

அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள்.

'நீண்ட இரவு

நியமப்படி கழிந்து

மீண்டும் ஒருநாள் விடியும்'

'மீண்டும் விடியும் விடிவை எதிர்கொள்ள

நாங்கள் விழித் தெழுவோம்

நாங்கள் விழித் தெழுவோம்'

'சூரியனின் தேர்ச்சில்லைத்

தோளால் அசைத்திடுவோம்

தேரின் குதிரைகளை

எம்திசையில் செல்லவைப்போம்'

'நாங்கள் ஒரு வையகத்தை

நாங்கள் ஒரு வானகத்தை

எங்கள் கரத்தால்

இணக்கி முடித்திடுவோம்

அங்கு புதுச் சூரியன் ஒன்று

ஆக்கி அமைத்திடுவோம்'

'எங்களிடம் என்ன

இழக்க இருக்கிறது

வாருங்கள் நாங்கள் இந்த

வையகத்தை வென்றெடுப்போம்'

காற்று இப் பெருங்குரலை

ஐ எடுத்துச் சென்றது

நாற்றிசையும் இக்குரலின்

நாதம் பரவியது.

மண்ணின் புழுதி இவ்

வார்த்தைகளை ஏந்தியது

விண்ணில் முகிலில் இதை

மீண்டும் எழுதியது.

அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள்

எந்தச் சிறுநிழலும் இல்லாத பாதையிலே

அந்த வெயிலில் அவர்கள் ந்டந்தார்கள்.

II

'யார் நீங்கள்...?

இத நடுமதிய வேளையிலே

போர் புரியும் நோக்கில் புறப்பட்டு வந்துள்ளீர்

யார் நீங்கள்...?'

'யார் நீங்கள்...?

மாளிகையில் நாங்கள் களைப்பாறும்

வேளையிலே

கோப, வெறியை வெளிக்காட்டிப்

போர் புரியும் நோக்கில்

புறப்பட்டு வந்துள்ளீர்

யார் நீங்கள்...?'

'யார் நீங்கள்...?

எங்கள் அனுமதியை நாடாமல்

வீதி கடந்து

வெளி வாயிலும் கடந்து

போர் புரியும் நோக்கில்

புறப்பட்டு வந்துள்ளீர்

யார் நீங்கள்...?'

ஆளும் குரல்கள்

அதிகாரக் கூக்குரல்கள்

சூழும் குளிர்ந்த நிழலில் சுகங்காணும்

ஆளும் குரல்கள்

அதிகாரக் கூக்குரல்கள்.

சுங்கான் புகையின்

சுகந்த மணத்திடையே

யானைப் பிளிறல் போல

நாற்றிசையும் கேட்டன.

III

'நாங்கள் யார்?

நாங்களே இந்நாட்டின் உழைப்பாளர்!'

'நாங்கள் யார்?

நாங்களே இந்நாட்டின் வறியவர்கள்'

'நாங்கள் யார்?

நாங்களே இந்நாட்டின் வெகு ஜனங்கள்'

'நாங்கள், ஆம்

நாங்களே இந்நாட்டின் வரலாற்றை

ஆக்கி வளர்க்கும்

அரிய படைப்பாளர்'

'நீண்ட இரவில் நெடுநாள் துயில் புரிந்து

மீண்டும் உமது சுமையால் துயில் கலைந்த

நாங்கள், ஆம்

நாங்களே இந் நாட்டின் எஜமானர்'

'இந்த யுகமும்

இனிவரும் ஒவ்வோர் யுகமும்

எங்கள் யுகமாகும்

எங்கள் யுகமாகும்'

காற்று இப் பெருங்குரலைக்

கையெடுத்துச் சென்றது

நாற்திசையும் அக்குரலில்

நாதம் பரவியது.

மண்ணின் புழுதி இவ்

வார்த்தைகளை ஏந்தியது

விண்ணில் முகிலில் இதை

மீண்டும் எழுதியது.

'யாருடைய வேர்வை இந்

நாட்டை நனைத்ததுவோ

யாருடைய வேர்வை இந்

நாட்டை வளர்த்ததுவோ

ஆம், அவர்க்கே நாட்டின்

அனைத்தும் உரித்தாகும்

ஆம் அவர்க்கே நாட்டின்

அனைத்தும் உரித்தாகும்'

'நாங்களே இந் நாட்டை நனைத்தவர்கள்

நாங்களே இந் நாட்டை வளர்த்தவர்கள்

எங்கள் வயிற்றில்

நெருப்பே எரிகிறது

எங்கள் வயிற்றில்

நெருப்பே எரிகிறது'

'எங்கள் குருதியினால்

நாங்கள் இதை வென்றெடுப்போம்

எங்கள் வியர்வையினால்

நாங்கள் இதைச் சுத்திசெய்வோம்'

'எங்களிடம் என்ன இழக்க இருக்கிறது

வாருங்கள் நாங்கள் இந்த

வையகத்தை வென்றெடுப்போம்

வாருங்கள் நாங்கள் இந்த

வையகத்தை வென்றெடுப்போம்'

காற்று இப்பெருங்குரலைக்

கையெடுத்துச் சென்றது

நாற்றிசையும் அக்குரலின்

நாதம் பரவியது

மண்ணின் புழுதி இவ்

வார்த்தைகளை ஏந்தியது

விண்ணில் முகிலில் இதை

மீண்டும் எழுதியது.

7-9-1970

----------------------------------------------------

முறையீடு

நாங்கள் வறியவர்கள்

நரகத்தில் வாழுகிறோம்

நாயகமே நாங்கள்

நரகத்தில் வாழுகிறோம்.

எங்களுக்கோர் ஆன்மா

இருக்குதென்று சொல்லுகிறார்

எங்களுக்கோர் சொர்க்கம்

இருக்குதென்று சொல்லுகிறார்

நாங்கள் இதையறியோம்

நாங்கள் வறியவர்கள்

நாங்கள் வறியவர்கள்

நரகத்தில் வாழுகிறோம்

நாயகமே நாங்கள்

நரகத்தில் வாழுகிறோம்.

எங்களது ஆன்மா

இறைவனுடன் சேர்ந்துடுமாம்

எங்களது சொர்க்கத்தில்

இளமை நிரந்தரமாம்

எங்களது சொர்க்கத்தில்

இன்பம் நிலைத்ததுவாம்

எங்களுக்குச் சொர்க்கத்தில்

ஹூர்லின்கள் உள்ளனராம்.....

நாங்கள் இதை அறியோம்

நாங்கள் வறியவர்கள்

நாங்கள் வறியவர்கள்

நரகத்தில் வாழுகிறோம்

நாயகமே நாங்கள்

நரகத்தில் வாழுகிறோம்.

எங்களது ஆன்மாவை

நாங்கள் இழந்தனமாம்

எங்களது ஆண்டவனை

நாங்கள் மறதனமாம்

எங்கள் விதி இதுவாம்

இறைவன் விதித்தவனாம்

நாங்கள் பொறுத்திருந்தால்

சொர்க்கம் நமக்குண்டாம்....

நாங்கள் இதை அறியோம்

நாங்கள் வறியவர்கள்

நாங்கள் வறியவர்கள்

நரகத்தில் வாழுகிறோம்

நாயகமே நாங்கள்

நரகத்தில் வாழுகிறோம்...

றம்ழான் வரும்போகும்

நாங்கள் பசித்திருப்போம்

ஹஜ்ஜு வரும்போகும்

அன்றும் பசித்திருப்போம்

றபியுலவ்வல் வந்தாலும்

நாங்கள் பசித்திருப்போம்

நாங்கள் வறியவர்கள்

நரகத்தில் வாழுகிறோம்

நாயகமே நாங்கள்

நரகத்தில் வாழுகிறோம்.

இங்கு சிலர் உள்ளார்

இவர்கள் உலமாக்கள்

இன்னும் சிலர் உள்ளார்

இவர்கள் பிரமுகர்கள்

இன்னும் சிலர் உள்ளார்

பெரிய பணக்காரர்....

றம்ழான் வரும்போதும்

அவர்கள் வருவார்கள்

ஹஜ்ஜு வரும்போதும்

அவர்கள் வருவார்கள்

றபியுலவ்வல் வந்தாலும்

அவர்கள் வருவார்கள்....

மேடை அமைப்பார்கள்

மின்விளக்குத் தொங்கவைப்பார்

சோடனைத் தாள்களினைத்

தூக்கி அலங்கரிப்பார்

பன்னீர் தெளிப்பார்கள்

பாத்திஹா ஓதிடுவார்

கண்டோர் புகழ்ந்துரைக்க

கந்துரி வைத்திடுவார்....

பாடும் ஒலிபெருக்கிப்

பாடல் இசைத்திடுவார்

மேடையிலே வந்துநிற்பார்

மேன்மைக் கதைகள்சொல்வார்....

ஆன்மாவைப் பற்றி

அவர்கள் கதைசொல்லுகிறார்

ஆண்டவனைப் பற்றி

அநேக கதை சொல்லுகிறார்

சொர்க்கத்தைப் பற்றித்

தொடர்ந்து கதை சொல்லுகிறார்

துன்பத்தை வெல்லத்

தொடர்ந்து வழிசொல்லுகிறார்.

எங்களது ஆன்மாவை

நாங்கள் அறியவில்லை

எங்களது சொர்க்கத்தை

நாங்கள் அடையவில்லை

எங்களது துன்பத்தை

நாங்கள் களையவில்லை

நாங்கள் வறியவர்கள்

நரகத்தில் வாழுகிறோம்

நாயகமே நாங்கள்

நரகத்தில் வாழுகிறோம்....

அவர்கள் தமகேன்றோர்

சொர்க்கத்தைக் கட்டியுள்ளார்

அவர்கள் தமக்கென்றோர்

ஆன்மா இயற்றியுள்ளார்

அவர்கள் நமக்கோர்

இறைவனையும் ஆக்கியுள்ளார்

மாபிள் பதித்த

மசூதிகளுக் குள்ளேநும்

ஆண்டவனைக் கொண்டு

அவர்கள் சிறைவைத்துள்ளார்.

இவர்களது சொர்க்கத்தில்

எமக்கோர் இடமில்லை

எங்கள் நரகுக்கு

இவர்கள் வருவதில்லை

நாங்கள் வறியவர்கள்

நரகத்தில் வாழுகிறோம்

நாயகமே நாங்கள்

நரகத்தில் வாழுகிறோம்....

நாயகமே எங்கள்

நரகுக்கு வாருங்கள்

நாயகமே எங்கள்

நரகத்தைப் பாருங்கள்...

நீங்கள் இங்குவந்தால்நும்

நெஞ்சு கலங்கிவிடும்

நீங்கள் எமைக்கண்டால் நும்

நினைவும் அதிர்ந்துவிடும்

நாங்கள் அதை அறிவோம்

நாயகமே வாருங்கள்

நாயகமே எங்கள்

நரகத்தைப் பாருங்கள்

20-4-1972

----------------------------------------------------

மே முதல் திகதி

மே முதல் திகதி

இன்று விடுமுறை

புதிய் வருஷம்

பூரணை நிலவு

நபிகள் ஜெயந்தி

பெரிய வெள்ளி

விசாகப் பெருநாள்

விடுமுறை தினங்கள்

மேலும் உள்ளன விடுமுறை தினங்கள்

மே முதல் திகதி

இன்றும் விடுமுறை.

கால்நடை யாக நாங்கள் வந்தோம்.

கார்களில் ஏறி அவர்கள் வந்தனர்.

செவ்வுடை அணிந்த மந்திரி மார்கள்

காக்கிச் சட்டைகள்

முன்னும் பின்னும்...

செங் கொடி எங்கும்

ஆடி அசைந்தன

ஒலி பெருக்கிகள்

ஓசை எழுப்பின...

'பாட்டாளித் தோழரே

நாட்டை ஆள்வர்'

'முதலாளித்துவம்

அழிந்து முடியும்'

'வேலை இன்மையை

நாங்கள் ஒழிப்போம்'

'வியர்வை சிந்தி

மேலும் உழைப்போம்'

'வாழ்க வாழ்க

பாட்டாளிகள்

வாழ்க வாழ்க

பாட்டாளிகள்'

"நமோ நமோ மாதா...

நம் சிறீ... லங்கா..."

கால்நடையாக நாங்கள் சென்றோம்.

கார்களில் ஏறி அவர்கள் சென்றனர்.

மே முதல் திகதி

விடுமுறை முடிந்தது.

1-5-1972

----------------------------------------------------

கண் விழித்திருங்கள்

எதை இழந்தோம் நாங்கள்?

எத்தகைய நம்பிக்கை

நட்சத்திரத்தை நாங்கள் இழந்தோம்?

நமது குமுறலும்

சோகக் குரலும்

நமது துயரப் பிரபலா பங்களும்

எந்த நண்பனின் பிரிவுக்காக?

எது நமை இங்கே இழுத்து வந்தது?

எந்தக் காற்றெமை அடித்துச் சென்றது?

கால்பேஸ் திடலிலும்

காலி வீதியிலும்

சுதந்திரச் சதுக்கச் சுற்றுப் புறத்திலும்

லட்சோப லட்சம் மக்கள் திரளை

அடித்துச் சென்று குவித்த காற்றெது?

ஒரு கொத்தரிசியும்

விலை வாசிகளும்

திரும்பவும் நமது சரித்திரப் போக்கப்

பழைய பாதையில் திருப்புதல் கூடுமா?

பணக்காரர்களின் பத்திரிகைகளா

நமது விதியை நிர்ணயம் செய்வது...?

கண்விழித் திருங்கள்

கண்விழித் திருங்கள்

மரண ஊர்வலத்திலும்

வலைகள் உள்ளன

கண்விழித் திருங்கள்...

வேடரின் கையில் விடுவித்துக் கொண்டு

கசாப்புக்காரரை தஞ்சம் அடையும்

முயற்குட்டிகளே,

கண்விழித் திருங்கள்...

இருசுவர்க்கிடையே எற்றுண்டு உலையும்

கைப் பந்துகளே

கண் விழித்திருங்கள்...

நாங்கள் எதையும் இழக்கவும் இல்லை

இழக்க எதுவும் இருக்கவும் இல்லை

நமது நம்பிக்கை நட்சத்திரங்களை

நாங்கள் நம்மிடைத் தேடி அடைவோம்

கண்விழித் திருங்கள்...

கண்விழித் திருங்கள்...

22-4-1973

----------------------------------------------------

எங்கள் கிராமத்து மண்ணும்

வியட்நாமின் குருதியும்

எங்கள் கிராமத்து வாசிகசாலையில்

இன்று காலை இச் செய்தியை அறிந்தேன்.

'பன்னிரெண்டு ஆண்டு யுத்தம் முடிந்தது'

வெளியிலே வந்தேன்

வாகனங்களில் மனிதத் தலைகள்...

பஸ்சை நிறுத்தி ஓர் மனிதன் ஏறினான்.

மூலைக் கடையில் தேனீர் அடிக்கும்

சத்தம் கேட்டது...

சற்றுத் தொலைவிலே

'கிட்டி' அடிக்கும் சிறுவரின் குரல்கள்...

மீன்காரன் அதோ

முடக்கில் கிறுகி

'கூறிக்' கொண்டு சைக்கிளில் செல்கிறான்.

எங்கள் கிராமம்

அமைதியாய் உள்ளது.

யுத்தம் எதையும் கண்டறியாத

மக்களே நாங்கள்.

குண்டுகள் எதுவும் எங்கள் நிலத்தைக்

கிண்டி அதிர வைக்கவும் இல்லை.

காக்கைகள் தவிரப் போர் விமானங்கள்

எங்கள் வானில் பறக்கவும் இல்லை.

டாங்கியின் உறுமலும்

பீரங்கி வெடியும்

நாங்கள் கேட்டுப் பழகாதவைகள்...

யுத்தமும் சமாதானமும் கூடப்

பத்திரிகைச் செய்தியே எமக்கு...

II

உலகின் காலை உதய மாகிற

தூர கிழக்கின் வீர மக்களே

உங்களைப் போல் நாம்

ஒவ்வொரு தினமும்

குருதியில் குளித்து வெளிவரவில்லை.

தாயின் மார்பில் இதழ்பதித் திருக்கையில்

குண்டடிபட்டு இறந்த குழந்தைகள்

எதையும் நாங்கள் காணவும் இல்லை...

தோட்டங் களிலும்

வயல் வெளிகளிலும்

வீட்டின் இடிந்த சுவர்களின் இடையிலும்

பாடசாலை மேசை இடுக்கிலும்

ஆசுபத்திரிக் கூரையின் கீழும்

தேவாலயத்திலும்

தெருப் புழுதியிலும்

பிய்ந்து சிதறிய பிணங்களின் தொகுதி

எதையும் நாங்கள் காணவும் இல்லை

குடிசைகளோடு சாம்பலாகிய

முதியவர்களின் பாதி உடல்கள்

மெஷின் துப்பாக்கியின் சடசட ஒலியில்

மரணம் ஆடிய கொடிய நாடகம்

எதையுமே நாங்கள் காணவில்லை

எங்கள் கிராமம்

அமைதியாய் உள்ளது.

III

உலகின் காலை உதய மாகிற

தூர கிழக்கின் வீர மக்களே,

எழுபது லட்சம் தொன் நிறையான

குண்டுகள் விழுந்து குதறிய நிலத்தில்

ஐம்பது லட்சம் மக்களின் குருதி

பீறிச் சிதறிப் பெருகிய நிலத்தில்

அலைஅலையாக ஆர்ப்பரித் தெழுந்த

நீங்கள், எனக்கோர்

அற்புதக் கனவே.

கடலில் கரைத்த சாம்பலில் இருந்து

உயிர்பெற் றெழுந்த கசனைப் போல

நீங்கள் எனக்கோர்

அற்புதக் கனவே.

வாழிய நீங்கள்

அமைதி உங்கள் நிலத்தில் சுவறுக.

இனி ஒரு நாளில்

எங்கள் கிராமத்தின் அமைதியும் குலையலாம்.

நாமும் ஓர் புதிய வாழ்வுக்காகப்

போரிட நேரலாம்

அப்போது எங்கள் குருதியில், உங்கள்

வீரம் சுவறுக,

வெற்றி எமது காலடி வருக.

அடிமை உலகின் விடிவெள்ளிகளே

வாழிய நீங்கள்

வாழிய நீங்கள்...

----------------------------------------------------

அவர்களும் பூனைகளும் நாய்களும்

கார்கள் எல்லாம் போனபிறகு

ஹோட்டல் கதவுகள் மூடிய பிறகு

விளக்குகள் எல்லாம் அணைத்த பிறகு

அவர்கள் வருவர்...

தினமும் வருவர்

சப்பி எஞ்சிய இறைச்சிச் சவ்வுகள்

கை துடைத்த கடதாசித் துண்டுகள்

கோழி முட்கள்

நண்டுக் கோதுகள்

காய்கறி அரிந்த கழிவுகள்

நூடுல்ஸ்

ஃப்றைற் றைஸ்

தென்னந் தும்புகள்

தேங்காய்ப் பூதுகள்

குப்பைத் தொட்டியில் குவிந்து கிடக்கும்.

அவர்கள் வருமையில்

நின்று சுவைத்த

பூனைகள், நாய்கள்

பொறாமையோடு விலகிச் செல்லும்

தொலைவில்

அவர்கள் முகத்தைப் பார்த்த வாறே

உட்கார்ந் திருக்கும்

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும்

12-7-1975

----------------------------------------------------

இறுதி அஞ்சலி

எதிர்பார்த்த துயரம் இறுதியில் நிகழ்ந்தது

நூறு செஞ்சூரிய ஒளி நூர்ந்து அவிந்தது

வேறு வேறாகின அறிவும் சடலமும் ...

தலைவர் மா ஓ,

பத்திரிகைகளில் பலமுறை இறந்து

இத்தினம் இறுதியாய் முதல்முறை இறந்தீர்

தலைவர் மா ஓ,

தலை குனிந்து உமக்கு

அஞ்சலி செய்கிறேன்

மௌனமாக, வார்த்தைகள் அற்று ...

வார்த்தையில் உனது மகிமையைச் செதுக்கும்

ஆற்றலை இழந்தேன்;

ஆயினும் சொல்வேன்

முன் ஒரு கவிஞன் சொன்னது போல

'எனது மண்ணை நீ பொன்னாக மாற்றினாய்

எனது சாம்பலை எரிந்திடச் செய்தாய்'

தலைவர் மா ஓ,

தலை குனிந்து உமக்கு

அஞ்சலி செய்கிறேன்

மௌனமாக... வார்த்தைகள் அற்று...

அநீதியின் பெருமூச்சில்

நீ உயிர்த் தெழுந்தாய்

நீதி, உன் மூச்சினால்

உயிர் பெற் றெழுந்தது.

தூங்கிய அரக்கனைத்

தொட்டு நீ அசைத்தாய்

தேவனாக அவன் விழித் தெழுந்தான்

தலைவர் மா ஓ,

உன் தகைமையின் சின்னமாய்

எண்பது கோடி மனிதரைக் கண்டேன்

தலைவர் மா ஓ,

உன் தகைமையின் சின்னமாய்

இலட்சம் கோடி மனிதர்கள் தோன்றுவர்.

இலட்சியங்களின் இலட்சியம் உனது

புரட்சிகளுக்கோர் புரட்சியும் உனது

மனித முழுமையின் இலக்கணம் உனது

மனித குலத்தின் தவப்பயனால் இம்

மண்ணிலே உதித்த ஞாயிறு நீ

ஒடுக்கப்பட்ட மக்களின் வேட்கை

ஒன்று திரண்ட உருவமும் நீ

உன் வார்த்தைகள்

சொர்க்க வாயிலைத் தகர்த்தன

மண்ணிலே அதனை மாற்றி அமைத்தன

நீ ஒரு பிரளயம் கிளர்ந்தெழச் செய்தாய்

அழுக்குகள் அதிலே அள்ளுண்டு சென்றன

நீ ஒரு புயலினை வீசிடச் செய்தாய்

தூசும் புழுதியும் துடைக்கப் பட்டன.

உனது வாழ்க்கை ஓர் அற்புதம் அல்ல

அற்புதங்களின் அற்புதம் அதுவே

உனது மரணம் ஓர் யுகமுடி வல்ல

நூறு யுகங்களின் தொடக்கமும் அதுவே

இன்னும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள்

உனது வெளிச்சம் எம் வழி காட்டும்

இன்னும் இன்னும் பன்னூறு யுகங்கள்

உனது ஓசை இம் மண்ணிலே ஒலிக்கும்.

உனது விதைகளின் வலிமையில் இருந்து

நாங்கள் புயல்போல் சீறி எழுவோம்

உனது விதைகளின் வண்மையில் இருந்து

வாழ்க்கையைப் புதிதாய் மாற்றி அமைப்போம்

உனது புரட்சியின் விதைகளை இத

மண்ணிலும் விண்ணிலும்

நாங்கள் விதைப்போம்

ஆகையால் துயிலள்

அரும் பெரும் தலைவா,

அமைதியாக... ஆறுதலாக...

13-9-1976

----------------------------------------------------

நேற்றைய மாலையும் இன்றைய காலையும்

I

நேற்று மாலை

நாங்கள் இங்கிருந்தோம்

சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்

வாகன நெரிசலில்

சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.

பூபால சிங்கம் புத்தக நிலைய

முன்றலில் நின்றோம்

பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.

பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்

பார்த்தவா றிருந்தோம்.

பலவித முகங்கள்

பலவித நிறங்கள்

வந்தும் சென்றும்

ஏறியும் இறங்கியும்

அகல்வதைக் கண்டோம்.

சந்தைவரையும் நடந்து சென்றோம்

திருவள்ளுவர் சிலையைக் கடந்து

தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி

பண்ணை வெளியிற் காற்று வாங்கினோம்.

'றீகலின்' அருகே

பெட்டிக் கடையில்

தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.

ஜாக் லண்டனின்

'வனத்தின் அழைப்பு'

திரைப்படம் பார்த்தோம்.

தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்

சைக்கிளில் ஏறி

வீடு திரும்பினோம்.

II

இன்று காலை

இப்படி விடிந்தது

நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்

காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன.

குண்டுகள் பொழிந்தன;

உடலைத் துளைத்து

உயிரைக் குடித்தன.

பஸ்நிலையம் மரணித் திருந்தது.

மனித வாடையை நகரம் இழந்தது

கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன

குண்டு விழுந்த கட்டட மாக

பழைய சந்தை இடிந்து கிடந்தது

வீதிகள் தோறும்

டயர்கள் எரிந்து கரிந்து கிடந்தன.

இவ்வாறாக

இன்றைய வாழ்வை

நாங்கள் இழந்தோம்

இன்றைய மாலையை

நாங்கள் இழந்தோம்.

1977

----------------------------------------------------

ஒரு மஹாகவி பற்றி மற்றொரு கவிஞன்

வானில் புதியதோர் வெள்ளி மலர்ந்தது

மலர்ந்து

இன்று நூறாண்டுகள் ஆயின.

மண்ணில் புதியதோர் பொன்மலர் பூத்தது

பூத்து இன்று நூறாண்டுகள் ஆயின.

மாகவி இக்பால்,

நீ இம் மண்ணிலே பிறந்து

ஆயின இன்று நூறு ஆண்டுகள்.

வரலாற்றுப் போக்கில் நூறு ஆண்டுகள்

மிகமிகச் சிறியதே.

மனிதனின் வாழ்விலோ நூறு ஆண்டுகள்

மிகமிக நெடியதே.

நீண்ட எமது வாழ்க்கை நெரிசலில்

நேற்றைய நிகழ்வையே

மறப்பவர் நாங்கள்

இன்றைய வாழ்வின் இடர்களுள் மூழ்கி

நேற்றைய மனிதரை மறப்பவர் நாங்கள்.

ஆயினும் நான் உனை நினைவு கூர்கிறேன்.

ஏனெனில், நீ யொரு கவிஞன் ஆகையால்

மண்ணையும் விண்ணையும்

குடைந்து சென்றன

உனது கவிதைகள்

ஆகையால் தான்

இன்றும் நான் உனை நினைவு கூர்கிறேன்.

கிழக்கிலும் மேற்கிலும் சூரியன் உதிக்கும்

நமது கவிதையில் ஆற்றல் இருந்தால்

வடக்கிலும் தெற்கிலும் சந்திரம் எழும்பும்

நமது கவிதையில் உணர்ச்சி தெறித்தால்

வானக் கோள்களின் வரிசைகள் மாறும்

பூமிச் சுழற்சியின் திசைகளும் மாறும்

நமது கவிதையில் உண்மை கனன்றால் ...

உனது கவிதையில்

ஆற்றல் இருந்தது

உனது கவிதையில்

உணர்ச்சி தெறித்தது

உனது கவிதையில்

உண்மை கனன்றது

மாகவி இக்பால்,

ஆகையால் நான் உனை நினைவு கூர்கிறேன்.

மனிதனே இந்த உலகின் முதல்வன்

மனித மேன்மையே உனது குறிக்கோள்

மனித வாழ்வின் தளைகளை உடைத்து

மனித மேன்மையை உறுதிப் படுத்தவே

உனது கவிதைகள் கீதம் இசைத்தன

பூரண மனிதனைக் காண விளைந்தன

உனது கவிதைகள்

'தான்' எனும் மனித தனித்துவ வளர்ச்சியே

உனது கவிதையின் உட்பொருளாகும்

வாழ்வின் முனைப்பும், இயக்கமும் உனது

இலட்சிய மாகும்.

அச்சம், நிராசை என்பன உனது

கவிதைக் கனலின் எதிரிகள் ஆகும்

ஆகையால்

நான்உனை நினைவு கூர்கிறேன்.

இஸ்லாம் உனது விளைநிலம் ஆனது

உனது வேர்கள் அதிலே சுவறின

உனது கிளைகளும் தளிர்களும் கூட

அந்த நீரிலே பசுமை கொண்டன

ஆயினும் நீ அதைத் தாண்டியும் சென்றாய்

"கோயிலுக்கு நான் மரியாதை செய்கிறேன்

க்ஃபாவின் முன் நான் மண்டி இடுகிறேன்

எனது மார்பிலே பூணூல் உள்ளது

எனது கையிலே ஜபமாலை ஒளிரும்..."

என்று நீ ஒரு கவிதையில் பாடினாய்.

முஸ்லிம் உலகில் உன்

கனவுகள் விரிந்தன.

ஆயினும் கூட

அதற்கப்பாலும்

மனிதனைப் பற்றி உன் நினைவுகள் அகன்றன.

இந்துஸ்தானில் உன் கால்கள் பதிந்தன

ஆயினும் கூட

அதற்கப்பாலும்

எல்லா இடமும் உன் கைகள் விரிந்தன.

'மண்ணில் இருந்தும்

தண்ணீரில் இருந்தும்'

விடுபடச் சொன்னாய்.

ஆப்கானியனோ துருக்கனோ அல்லன்

ஆக முதலில் நான் ஒரு மனிதன்

எனக்கு வேறு வர்ணங்கள் இல்லை

அதன்பின் நானோர் இந்தியன் ஆகலாம்

அன்றேல் வேறோர் இனத்தவன் ஆகலாம்'

என்று கூறினாய்.

மாகவி இக்பால்,

உனது வார்த்தைகள் மகத்துவம் உடையன.

ஆகையால் நான் உனை நினைவு கூர்கிறேன்.

வாழ்வின் கொடுமையை

நீ உணர்ந்திருந்தாய்

மனித சுரண்டலை நீ வெறுத் திருந்தாய்

ஏற்றத் தாழ்வினை நீக்கவே நினைத்தாய்

அடிமைத் தளையை அறுக்கவே துடித்தாய்

உன்னுள் மலர்ந்த

மனித நேயம் மதிக்கத் தக்கதே

உன்னுள் மலர்ந்த

கற்பனைக் கனவுகள் அற்புதமானதே.

மாகவி இக்பால்,

ஆயினும் நமக்குள் வாதங்கள் உள்ளன.

உனது காலத்தின் விளைச்சலே நீ

எனது காலத்தின் அறுவடை நான்

ஆகையால் நமக்குள் வாதங்கள் உள்ளன.

அற்புதமான

கற்பனா வாதிநீ

கனவுகள் மிகுந்த

அகநிலை வாதி நீ

உனது கனவுகள் கற்பனை ஆயின

உனது கற்பனை கனவுகள் ஆயின

மதத்தின் பேரில் ஓர் இராச்சியம் அமைக்கும்

உனது கனவுகள் கற்பனை ஆயின

இனத்தின் பேரில் ஓர் ஐக்கியம் வளர்க்கும்

உனது கற்பனை கனவுகள் ஆயின

லாகூரிலும் டாக்காவிலும்

உனது கனவுகள் மரணம் அடைந்தன

சிந்து வெளியிலும் கங்கைக் கரையிலும்

உனது கற்பனை சமாதி அடைந்தது.

உனது ஷிக்வாவுக்கு

நானோர் ஜவாபு சொல்வேன்

உனது அழுகைக்கு நனோர்

ஆறுதல் சொல்வேன்

சாகோதரத்துவச் சாம்பலில் இருந்து

வர்க்க உணர்வுடன் விழித்தெழச் சொல்வேன்.

மகாகவி இக்பால்,

அற்புத இலட்சியம் ஆயிரம் உடைய

கற்பனா வாதிநீ.

உனது இலட்சியம் மகிமைக் குரியது

கற்பனா வாதமோ விசாரணைக் குரியது.

நேற்றை விடவும்

இன்று இனியதே

இன்றை விடவும்

நாளை புதியதே

நேற்றைய உனது பாதை வேறு

இன்றைய எனது பாதை வேறு

நாளை வருபவன் நமைவிடப் புதிய

பாதையில் போகலாம்

வாழ்க்கை இதுவே.

இயக்கமே வாழ்க்கையின் இலக்கணமாகும்.

உனது நோக்குகள் உன்னத மானதே

உனது இதயம் புனித மானதே

உனது கனவுகள் மனிதனின் கனவே

உனது கவிதைகள் மகத்துவம் உடையதே

வரலாறு என்னும் சங்கிலித் தொடரில்

உனது பெயரும் பளீரென மின்னும்

அந்த மின்னலில் வெளிச்சம் பெறுவோம்

ஆகையால் உன்னை நினைவு கூருவோம்

இன்னும் நூறு ஆண்டுகளுக்கு,

பிறகும், அதற்குப் பிறகும் கூட

நாங்கள் உன்னை நினைவு கூருவோம்.

28-1-1978

-----------------------------------------------------

புத்தரின் படுகொலை

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்

அமைச்சர்கள் வந்தனர்.

'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

பின் ஏன் கொன்றீர்?'

என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை

இவரைச் சுடாமல்

ஓர் ஈயினைக் கூடச்

சுடமுடியாது போயிற்று எம்மால்

ஆகையினால்......

என்றனர் அவர்கள்.

'சரி சரி

உடனே மறையுங்கள் பிணத்தை'

என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்

*சிகாலோவாத சூத்திரத்தினைக்

கொழுத்தி எரித்தனர்.

புத்தரின் சடலம் அஸ்தியானது

*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-1981

-------

* சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பௌத்தமத அறநூல்கள்.